Monday 10 December 2012


வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்


1. எனக்கு "வயதாகிவிட்டது" என்று எப்போதும் சொல்லாதீர்கள். மூன்று வகைகளில் வயதைக் கணக்கிடலாம். முதல் வழி உங்கள் பிறந்த தேதியை வைத்து. இரண்டாவது வழி உங்கள் உடல் ஆரோக்கியத்தை வைத்து. மூன்றாவது வழி உங்கள் வயது எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது. உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய நல்ல கனவுகளுடன் வாழுங்கள்.

2. நல்ல ஆரோக்கியமே மனிதனின் சொத்து. நீங்கள் உங்கள் மனைவி மக்களை உண்மையாக விரும்புவீர்களானால் உங்கள் உடல் நலத்தை முக்கிமாகப் பேணவேண்டும். அவர்களுக்கு நீங்கள் ஒருபோதும் பாரமாகி விடக்கூடாது. வருடத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்து கொள்ளுங்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள்.

3. பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, குடும்ப அங்கத்தினர்களின் மரியாதையைப் பெற, உடல் ஆரோக்கியத்தைப் பேண, இத்தியாதி காரியங்களுக்குப் பணம் தேவை. உங்கள் குழந்தைகளானாலும் சரி, உங்கள் சக்திக்கு மீறி செலவு செய்யாதீர்கள். வயதான காலத்தில் அவர்கள் உங்களைக் காப்பாற்றினால் சந்தோஷப்படுங்கள். இல்லாவிட்டால் உங்கள் காலில் நிற்க பணம் தேவை.

4. அமைதியான வாழ்வு வாழுங்கள். நல்ல பொழுது போக்குகளும் நல்ல தூக்கமும் வாழ்க்கைக்கு அவசியம். ஆன்மீக விஷயங்களில் நாட்டமும், நல்ல சங்கீதமும் அமைதிக்கு வழி.

5. நேரம் விலை மதிப்பு மிக்கது. அதுவும் வயதான பின்பு மிகமிக மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். அந்த நாளை கவலைகளில் வீணாக்காமல் இன்பமாக கழியுங்கள்.

6. மாறுதல் ஒன்றே மாறாதது. காலம், மனிதர்கள், வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைக்குறித்து வருத்தப்படாமல் நீங்களும் அந்த மாறுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. கொஞ்சம் சுயநலத்துடன் வாழுங்கள். உங்களுக்கு என்று சில விருப்பங்கள் இருக்கலாம். இது நாள் வரை மற்றவர்களுக்காக உழைத்ததில் அந்த விருப்பங்களை தள்ளிப்போட்டிருப்பீர்கள். இப்போது அவைகளை அனுபவியுங்கள். அது சுயநலம் போல் தோன்றினாலும் அந்த சுய நலம் உங்களுக்குத் தேவை.

8. மன்னிப்போம்-மறப்போம். மற்றவர்களின் குறைகளை பெரிது பண்ணாதீர்கள். உங்களுடைய நலனுக்காக, உங்களுடைய இரத்த அழுத்தம் அதிகமாகாமலிருக்க மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

9. ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவியுங்கள். மற்றவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பாணியில் வாழ சுதந்திரம் உண்டு.

10. மரண பயத்தை வெல்லுங்கள். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதி மாற்ற முடியாதது. அதை உணர்ந்து மரண பயத்தை வெல்லுங்கள்.   நீங்கள் இறந்து விட்டால் உங்கள் மனைவி மக்கள் எப்படி வாழ்வார்கள் என்ற கவலை வேண்டாம். யாரும் இறந்தவர்களுடன் இறப்பதில்லை. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

1 comment:

Unknown said...

manoj i like it realy superb